இனி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால்.. பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் 40 நாட்கள் முழு ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. இந்த பொது ஊரடங்கு வரும் 3 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது உள்ள கொரோனாவின் தீவிர பரவல் காரணமாக, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Lockdown is extended the economy will go into disaster

ஆனால், இந்த 40 நாட்கள் பொது முடக்கத்தால், நாட்டின் பொருளாதாரம் ஆதாள பாதாளத்திற்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களிடம் பணம் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், “மக்களையும், பொருளாதாரத்தையும் காக்க, மரபுகளையும், விதிமுறைகளையும் மீறலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா பிரச்சினையால் வேலையிழந்து வறுமையில் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க, உடனடியாக 65 ஆயிரம் கோடி ரூபாய் தேவை” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், “இந்தியாவில் 3 வது அல்லது 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், இந்தியாவின் பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும்” என்றும் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.

இதனால், ஊரடங்கைத் தொடர்ந்து நீட்டிக்காமல், பொருளாதாரத்தை படிப்படியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான வழியைத் தேட வேண்டும்” என்றும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் வலியுறுத்தினார்.