தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட 12 குழுக்களுடன், முதலமைச்சர் பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை ஊரடங்கிற்கு முன் 18 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது வரை தமிழகம் முழுவதும் 738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனாவை தடுக்க அமைக்கப்பட்ட 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட 12 குழுக்களுடன், இன்று காலை முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கொரோனா வைரஸ் தொடர்பான ஐ.வி.ஆர்.எஸ். தானியங்கி குரல் வழி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம் இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.

அத்துடன், 9499912345 என்ற அவசர உதவி எண்ணில், கொரோனா தொடர்பான விளக்கங்களைப் பெறலாம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என்றும், சில நடைமுறைகள் கடுமையாக்கப்படும் என்றும், இதற்குப் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கெட்டுக்கொண்டார்.

மேலும், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன். “ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றும், அது என்ன மாதிரியான முடிவு என்பதை முதலமைச்சரே ஆலோசித்து எடுப்பார்” என்றும் கூறினார்.

இதனிடையே, கொரோனா பாதிப்பில் 2 ஆம் இடத்தில் உள்ள தமிழகத்திற்கு, ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது தற்போது இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.