சென்னையில் 166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதித்த பட்டியலில், இந்தியாவிலேயே தமிழ்நாடு 2 வது இடத்தில் இருக்கிறது. அந்த அளவுக்கு, கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அதன் வேகம், சென்னையில் இதுவரை 166 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. சென்னை கே.கே. நகரில் மளிகை கடைக்குப் பொருள் வாங்க வந்த ஒருவருக்கு தற்போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அந்த மளிகைக் கடைக்குப் பொருள் வாங்க வந்த அனைவரையும் பரிசோதனை செய்யும் பணி தற்போது தொடங்கி உள்ளது. மேலும், அந்த நபருடன் தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், தமிழகம் முழுவதும் இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், இதுவரை 834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 6 பேருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்க 8 பேர் வரை உயிரிழந்த நிலையில், 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தமிழக அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட நபருக்குப் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட நபர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றும், குறிப்பாக அவர் பயன்படுத்தும் கழிவறையை வேறு யாரும் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முறையாக வாகன தணிக்கை செய்யாத காரணத்தால், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.