கொரோனா தடுப்பு பணிகளுக்குப் பொதுமக்கள் 100 ரூபாய் கூட நிதியாக வழங்கலாம் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டார்.

Public can donate Rs.100 to corona funds
 
மேலும், “தமிழகத்தில் நலவாரிய தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் என ஒட்டுமொத்தமாக 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்படும்” என்றும் கூறினார்.  

அதேபோல், “ மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

“80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான உதவித்தொகை, அவர்களது வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் என்றும், அதனால் முதியவர்கள் யாரும் அழைய தேவையில்லை” என்றும் அவர் கூறினார்.

சென்னையில் பணியின்பொழுது மரணம் அடைந்த காவலர் அருண்காந்தி குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் கூறினார்.  

அதேபோல், களப்பணியாற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் பணியின்போது உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்” என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 

“ தமிழகம் முழுவதும் 144 தடையை மீறியவர்களிடமிருந்து தற்போது வரை 40 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பணம் கூட கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.

“முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை 101 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் தங்களால் இயன்றளவு நிதி வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக கொரோனா தடுப்பு நிதியா பொதுமக்கள் 100 ரூபாய் கூட நிதி வழங்கலாம்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.