தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தப்லிக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழகத்திலிருந்து சுமார் 1,131 பேர் கலந்துகொண்டு ஊர் திரும்பினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட 80 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரையும் பரிசோதனை செய்ய தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது.

பின்னர், மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பற்றி சுமார் 515 பேர் கண்டறியப்பட்டனர். மற்றவர்களைக் கண்டுபிடிப்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 588 பேர், தானாக முன்வந்து சுகாதாரத்துறையிடம் தங்களைப் பற்றிய தகவலை தெரிவித்தனர். அதன்படி, அவர்களுக்குத் தொடர்ந்து பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், “தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் சுமார் 77 ஆயிரத்து 330 பேர் உள்ளதாக” குறிப்பிட்டார்.

அத்துடன், “4 ஆயிரத்து 80 பேர் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை முடித்து உள்ளனர் என்றும், விமான நிலையங்கள் அருகே உள்ள முகாம்களில் 81 பேர் கண்காணிப்பில் உள்ளனர்” என்றும் கூறினார்.

“தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்” என்றும் பீலா ராஜேஷ் சுட்டிக்காட்டினார்.

தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேர், 15 மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் தற்போது 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பரவி உள்ளது.

குறிப்பாக, கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 234 ஆக அதிகரித்ததுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, டெல்லி சென்றவர்கள் மருத்துவ பரிசோதனைகளைச் செய்துகொள்வது அவசியம் என்றும், இத்தருணத்தில் வெறுப்பு அரசியலைத் தூண்டுவது கண்டிக்கத்தக்கது என்றும் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.