இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1071 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1071 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 96 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனாவால் 106 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் டெல்லியில் மட்டும் 23 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், இந்தியாவில் கொரோனாவால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரம், கேரளம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உயிரிழப்புகள் நோ்ந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 186 போரும், கேரளாவில் 182 பேரும், கர்நாடகாவில் 76 பேரும், தெலங்கானாவில் 66 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 65 பேரும், குஜராத்தில் 58 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், ராஜஸ்தானில் 55 பேரும், டெல்லியில் 49 பேரும், பஞ்சாபில் 38 பேரும், ஹரியானாவில் 33 பேரும், ஜம்மு காஷ்மீரில் 31 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 30 பேரும், ஆந்திரத்தில் 19 பேரும், மேற்கு வங்கத்தில் 18 பேரும், பிகாரில் 11 பேரும், சத்தீஸ்கா், உத்தரகண்டில் தலா 7 பேரும், புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை ஆயிரத்து 71 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், நேற்று வரை சுமார் 34 ஆயிரத்தது 931 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.