இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் சற்று வேகமாகப் பரவத் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று மாலை 834 ஆக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மும்பையில் கொரோனா பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி தற்போது உயிரிழந்துள்ளார். மும்பையில் 3 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் 165 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனாவுக்கு கேரளாவில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்தள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த முதியவர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

அதேபோல், இந்தியாவில் முதன் முறையாகக் கர்நாடக மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர், குடும்பத்துடன் சமீபத்தில் கேரளாவுக்குச் சுற்றுலா சென்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையின் பெற்றோருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை இந்தியாவில் 19 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.