“அந்த கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது’ என சக மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் வாட்ஸ் அப்பில் ஆடியோ பதிவிட்டு அனுப்பிவிட்டு முதுகலை முதலாமாண்டு பயிலும் மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ரயில் மற்றும் அரசுப் பேருந்தின் குறிப்பிட்ட வழித்தடத்தில் வழக்கமாக செல்லும்போது ரூட்டு தல, பட்டாக்கத்தி, அடிதடி என கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. காவல்துறையினர் எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும் குறிப்பிட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கெத்து காட்டுவதற்காக அடிக்கடி மோதலில் ஈடுபடுவது வழக்கம்.

குறிப்பாக சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக் கல்லூரி, நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக் கொள்ளும் வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான் மாநிலக் கல்லூரியில் முதுநிலை முதலாமாண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் தன்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடித்து, தாக்கி அவமானப்படுத்தியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறேன் என ஆடியோ பதிவை சக மாணவர்களுக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். கூலித் தொழிலாளியான இவரது மகன் குமார் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு முதலாமாண்டு பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை புறநகர் ரயிலில் சக நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது திருநின்றவூர் அருகே வரும்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் குமார் மற்றும் நவீன் ஆகிய இரு மாணவர்களையும் பிடித்து கேலி, கிண்டல் செய்து அடித்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

நவீன் என்ற மாணவர் மட்டும் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிகிறது. ஆனால் மாணவர் குமார் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது 10-க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சேர்ந்துகொண்டு, மாணவர் குமாரை சரமாரியாக அடித்து உதைத்ததுடன் “தனியாக வந்து மாட்டிக்கொண்டாயா?... இத்துடன் பிழைத்துப் போ.. உனக்கு உயிர் பிச்சை போடுகிறோம். ஓடிவிடு” எனக்கூறி அங்கிருந்து அனுப்பி விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கடும் மன உளைச்சல் அடைந்த மாணவர் குமார், அந்த வழியாக சென்ற இன்னொரு ரயில் முன்பு பாய்ந்து திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கல்லூரி நண்பர்களுக்கு செல்ஃபோனில் பேசி ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப்பில் அவர் அனுப்பி இருக்கிறார்.

அதில் அவர் பேசி இருக்கும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் “பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போட்ட பிச்சை உயிரால என்னால வாழ முடியாது மச்சான்... நான் செத்துடுறேன் மச்சான்... என்னை தப்பா நினைச்சிக்காதீங்க...

என்னோட அப்பா, அம்மா யாருமே என்னை தப்பா நினைச்சிக்காதீங்க... அவங்க போட்ட பிச்சை உயிரால என்னால வாழ முடியாது” என சக மாணவர்களுக்கு அனுப்பிய ஆடியா பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆடியோவின் முடிவில் மின்சார ரயிலின் ஹாரன் சத்தம் கேட்கிறது. இதன் மூலம் ஆடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டு உடனடியாக ரயில் முன் பாய்ந்து மாணவர் குமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதேபோல் வேறொரு ஆடியோவில் ஒரு மாணவர் “உங்க பி.ஜி. படிக்கிற மாணவன் ஒருத்தன் மாட்டிக் கொண்டிருக்கிறான். யாராவது வந்து கூட்டிட்டு போங்கன்னு” பேசியுள்ள ஆடியோவும் இப்போது வெளியாகி உள்ளது.

அந்த ஆடியோவை கேட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து குமாரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து குமாரின் கல்லூரி அடையாள அட்டையை வைத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குமார் என்ற மாணவர் என்பது உறுதியானது.

இதனையடுத்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் மாணவர் குமாரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் குமார் தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரிந்ததும் அவருடன் படித்து வரும் சக கல்லூரி மாணவர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டனர். மாணவர் குமாரின் தற்கொலைக்கு காரணமான சம்பந்தபட்ட கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என சக மாணவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

மேலும் குற்றவாளிகளை கைது செய்யும் வரையில் மாணவர் குமாரின் உடலை வாங்கப் போவதில்லை என திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் முற்றுகையிட்டனர். மாணவர்கள் அதிகளவில் மருத்துவமனையில் திரண்டதால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேநேரத்தில் மாணவர் குமாரை கிண்டல் செய்த கல்லூரி மாணவர்கள் யார், யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 2 கல்லூரிகள் முன்பும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னையில் மோதல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு, குறறவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாக்குறுதி அளித்ததை அடுத்து தற்கொலை செய்துகொண்ட மாணவர் குமாரின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.