சென்னை பெருநகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை உடன் இருக்குமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் ஒரே தெருவை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியில் மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். 

அப்போது மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று ஓரிரு நாளிலேயே அதிகரித்து வருகிறது. 

chennai ashok nagarசென்னையிலும் தொற்று பாதிப்பு கூடி கொண்டே இருக்கிறது. சென்னை அசோக் நகர் எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19-வது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதி தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தெருவை சேர்ந்த ஒருவர், ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒருவரை சந்தித்து வந்துள்ளார். அவருக்கு பின் அடுத்தடுத்து தொற்று ஏற்பட்டுள்ளதால், இது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது.

மேலும் சென்னையில் நேற்று 194 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று 200-க்கும் அதிகமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை 17-வது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. 

ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக, சென்னையில் 3 இடங்களில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை, மஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 500 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தை மீண்டும் கொரோனா பாதுகாப்பு மையமாக மாற்றப்படும். சென்னை மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதை பொறுத்தவரை முதல் தவணை 86% பேருக்கும், இரண்டாம் தவணை 58% பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 95 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி உள்ளவர்களாக உள்ளனர். எனவே அவர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட 45 பேரில் 16 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 129 பேருக்கு எஸ்.ஜீன் டிராப் வந்துள்ளது. இவர்கள் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.

Chennai ashok nagarஒமிக்ரான் தொற்று ஏற்பட்ட அனைவரும் அறிகுறிகள் இல்லாத நோய் தன்மையுடன் உள்ளனர். உலகம் முழுவதும் வெளிவரும் மருத்துவ அறிக்கைகளும் பெரும்பாலும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அறிகுறிகள் அற்ற பாதிப்புடன் உள்ளனர் என்பதை காட்டுவதாக உள்ளது. 

அதனால் தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மாவட்ட வாரியாக பள்ளிகளில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கணக்கெடுக்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களுக்கு பள்ளிகளுக்குச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 3 ஆம் தேதி 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை போரூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

நடிகர் வடிவேலு , இயக்குநர் சுராஜ் உப்பட வெளிநாடுகளிலிருந்து வந்த பலருக்கு S வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்டாலும் பெரிய அளவில் அறிகுறிகள் இல்லாத சூழல் நீடிக்கிறது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.