மாநில காங்கிரஸ் கமிட்டிகளை இழுத்து மூடி விடலாமா என்று பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஷ்டா முகர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் பாஜக 8 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

இதனிடையே, டெல்லியில் பாஜக படுதோல்வி அடைந்தமைக்காகவும், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தமைக்காகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டி, இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகக் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஷ்டா முகர்ஜி, ப.சிதம்பரம் வெளியிட்ட டிவிட்டர் செய்தியைப் பதிவிட்டு, அது தொடர்பாகக் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதன்படி, “பாஜகவை வீழ்த்தும் பணி மாநில கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்டு உள்ளதா? என பணிவுடன் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அப்படி இல்லை என்றால், நமது தோல்வியைப் பற்றி கவலைப் படாமல், ஆம் ஆத்மி வெற்றியை ஏன் நாம் புகழ்ந்து கொண்டாட வேண்டும்?

ஆம் என்றால், நம்முடைய மாநில காங்கிரஸ் கட்சிகளை மூடி விடலாமா? என்றும் ஷர்மிஷ்டா முகர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனிடையே, ஷர்மிஷ்டா முகர்ஜியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்திலும், காங்கிரஸ் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.