ஒடிசாவில் சிறுவனுக்கு நாயுடன் கட்டாயத் திருமணம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா டிஜிட்டல் மயமானாலும், சமூகம் மேம்பட்டாலும், மனிதன் மாறினாலும், சில குக்கிராமங்கள் மட்டும் இன்றும் மூடநம்பிக்கையில் மூழ்கிப் போய் உள்ளன.

மூடநம்பிக்கையை முறியடிக்க, இங்கே நிறையத் திரைப்படங்கள் வந்துவிட்டன. ஆனால், ஒன்றிரண்டு மாற்றங்களைத் தவிர, இங்கே பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

ஒடிசா மயூர்பான்ஜ் மாவட்டத்தில் உள்ள பாரியா என்னும் கிராமத்தில், வாழும் பழங்குடியின மக்களிடம் ஒரு வினோத வழக்கம் ஒன்று உள்ளது.

அதாவது, இங்கு வாழும் பழங்குடியின சமூகத்தில் பிறக்கும் குழந்தைக்கு, முதலில் முளைக்கக்கூடிய பல், கீழ் தாடையில் வளர்ந்தால், அது நல்ல சகுணமாகவும், மேல் தாடையில் தோன்றினால், அது கெட்ட சகுணமாகப் பார்க்கப்படுகிறது.

அப்படி, இந்த வகையான தீய சகுணத்தைப் போக்கும் விதமாக, அப்படி மேல் வரிசையில் பல் முளைக்கும் குழந்தைகளை, நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கம், இந்த ஊரில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதன்படிதான், அந்த கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களுக்கு மேல் வரிசையில் பல் முளைத்துள்ளது. அதனால், இதனைக் கெட்ட சகுணமாக கருதி, அந்த 2 சிறுவர்களையும், மாப்பிள்ளை போல் அலங்காரம் செய்து, ஊரைச் சுற்றி வரச் செய்து, நாயுடன் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமண நிகழ்வை, அந்த கிராம மக்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனிடையே, மூடநம்பிக்கையின் அடிப்படையில் சிறுவர்களுக்கு நாயுடன் திருமணம் செய்து வைத்த நிகழ்வு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.