மகளிர் தினத்தன்று யோகாவில் சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரி மாணவி புதிய சாதனை படைத்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ஸில் இடம் பெற்று உள்ளார்.

மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் தான், பல்வேறு மாணவிகள் புதிய புதிய சாதனைகளை நிகழ்த்தி பல விருதுகளையும் பெற்றனர்.

அந்த வகையில், சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் பயின்று வரும் இளம் மாணவி ஒருவர், யோகாவில் புதிய சாதனை படைத்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ஸில் இடம் பிடித்து, தனது பெற்றோருக்கும், கல்லூரிக்கும் பெருமை தேடித் தந்து உள்ளார்.

அதாவது, கே.கே.நகர் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் வணிகவியல் துறை கல்லூரி மாணவியான செல்வி சே. பிரியதர்ஷினி, யோகாவில் ஆசிய அளவில் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

அதுவும், கடற்கன்னி வடிவில் அமர்ந்து செய்யப்படும் ஏக பாத ராஜகபோதாசனம் என்னும் யோகாசன நிலையில் தொடர்ந்து 60 நிமிடங்கள் இருந்ததன் மூலம் அவர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளார்.

அதாவது, ஏக பாத ராஜகபோதாசனம் என்கிற இந்த ஆசன நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நந்தினி சார்தா சுமார் 51 நிமிடங்கள் 58 வினாடிகள் கால அளவில் அமர்ந்து நிகழ்த்தியதே முந்தைய சாதனையாக இருந்தது.

அதைத் தொடர்ந்து, மாணவி பிரியதர்ஷினி முழுமையாக 60 நிமிடங்கள் அந்த ஏக பாத ராஜகபோதாசனம் ஆசன நிலையில் அமர்ந்து நீடித்ததன் மூலமாக, தற்போது இதில் புதிய சாதனை படைத்து உள்ளார்.

குறிப்பாக, இந்த புதிய சாதனையானது, கடந்த 8 ஆம் தேதி அன்று, மகளிர் தின கொண்டாட்டத்தின் போது, சென்னை கே.கே.நகர் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் இந்த சாதனையானது நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இந்த சாதனை நிகழ்ச்சியில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிலையத்தின் வேந்தரான ஏ.என். ராதாகிருஷ்ணன், கல்லூரித் தலைவரான ஜெயந்தி ராதாகிருஷ்ணன், மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வி.சாந்தி ஆகியோருடன், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நடுவர் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

யோகரத்னா சரஸ்வதி என்பவரிடம், கடந்த 3 ஆண்டுகளாகச் சிரத்தையுடன் யோகா பயின்றுவந்த மாணவி பிரியதர்ஷினி, தன் ஆசிரியரைப் போல, அவரும் யோகரத்னா பட்டம் பெற்றுள்ளார்.

தற்போது, மீனாட்சி கல்லூரியில் 3 ஆம் ஆண்டு வணிகவியல் பயின்று வரும் அவர் படிப்பிலும் சிறந்த மாணவியாகத் திகழ்ந்து வருகிறார்.

தம் கல்லூரி முதல்வர் சாந்தி, துறைத் தலைவர் ச.மலர் விழி ஆகியோர் ஊக்கமும் மெகர் பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிய நன்கொடை மற்றும் அனைத்து வகை உதவிகளும் உற்சாகமும் இந்தச் சாதனையை நிகழ்த்தக் காரணமாக அமைந்தது” என்று, சாதனையை நிகழ்த்திய மாணவி பிரியதர்ஷினி கூறியுள்ளார்.

மேலும், “இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த கல்லூரி நிர்வாகத்திற்குத் தன் நன்றியை” அந்த மாணவி தெரிவித்து உள்ளார்.

அத்துடன், யோகா ஆசிரியர் சரஸ்வதி, தன் தந்தை சேகர், தாய் அனிதா ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்துவதற்குத் தூண்டுகோலாக இருந்தனர் என்றும், சாதனை மாணவி பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.