கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக இந்தியா முழுவதும் மக்கள் அனைவரும் சுய ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததையடுத்து, தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய நகரங்கள் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

அத்துடன், இந்த இடைப்பட்ட நேரத்தில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊர்கள் பற்றிக் கணக்கிடப்பட்டன. அதன்படி தமிழகத்தின் தலைநகரான சென்னை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதேபோல் கொரோனாவால் காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னையில், பலர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வட மாநில மக்கள் அதிகம் காணப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமானவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஈரோட்டில் இதுவரை 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அங்கு 75 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த 75 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், ஈரோடு மாவட்டம் RED ZONE என அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிலைமை இப்படி இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இந்த உத்தரவை வரும் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்குமாறு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதேபோல், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எந்தந்த பகுதியில் அதிகம் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தின் 3 மாவட்டங்கள் உட்பட இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களை முடக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த 75 மாவட்டங்கள் நேற்று மாலை முதலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களின் எல்லையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இந்தியாவில் இந்த குறிப்பிட்ட 75 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.