சென்னையில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியின் மனைவியைக் கொல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு எப்போதும், மக்கள் நடமாட்டம் அதிக உள்ள பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், ரிச்சி தெருவில் பிற்பகலில் ஒரு பெண்ணும், அவருடன் அவரது உறவுக்கார பெண்ணும் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை பின் தொடர்ந்து, ஆட்டோவில் வந்துள்ளது. இந்நிலையில், அந்த பெண்ணின் முன்னாடி திடீரென்று வேகமாக ஆட்டோ வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். இதில், அவர் பயந்து ஓடவே அந்த கும்பல், துரத்தித் துரத்தி அரிவாளால் வெட்டி உள்ளது. இதில், அவர் பயந்துகொண்டு கூட்டத்தோடு கூட்டாக ஓடியுள்ளார். அப்போது, அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டதால், அந்த கும்பல் பயந்துபோய், அங்கிருந்து அவசர அவசரமாகத் தப்பி ஓடியுள்ளது.

இதில், படுகாயம் அடைந்த பெண்ணை, அங்குக் கூடியிருந்தவர்கள், மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண், ரவுடி சேகரின் 3 வது மனைவி என்பது தெரியவந்தது. மேலும், அந்த பெண்ணிடம் தாக்குதல் நடந்தது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சீன அதிபர் நாளை சென்னை வருவதையொட்டி, சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட இந்த சூழலில், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில், பெண் மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களைப் பீதியில் ஆழ்த்தி உள்ளது.