வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக, சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதல்வரும், துணை முதல்வரும் தங்களை பிடல் காஸ்ட்ரோ என்றும், சேகுவேரா என்றும் அழைத்துக்கொள்கின்றனர்” என்றும் விமர்சனம் செய்தார்.

மேலும், “இந்த மாதிரி செய்திகளைக் கேட்கக்கூடாது, இது போன்ற கொடுமைகள் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான், தலைவர்கள் எல்லாம் முன்பே இறந்துவிட்டனர்” என்றும் நகைச்சுவையாகக் கூறினார்.

அதேபோல், ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய சீமான், “தமிழக அரசு சட்டசபையைக் கூட்டி தீர்மானம் போடாமல், அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் போட்டிருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது, வருகிறது என்றார்கள். நாங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை, அதற்கான நிதியும் ஒதுக்கவில்லை என மத்திய அரசு கூறுகிறது. அதற்கு, நாங்கள் அழுத்தம் கொடுக்கிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது.

அவர்கள் கொடுக்கும் அழுத்தம் என்பது என்ன?, எஜமான் தூங்கும்போது கை, கால்களைப் பிடித்துவிடுவது தான் அழுத்தம். இது ஒரு வேடிக்கை விளையாட்டு” என்று நகைச்சுவையோடு சீமான் பேசினார்.

இந்நிலையில், வன்முறையைத் தூண்டும் வகையிலும், தமிழக அரசுக்கு எதிராகவும் சீமான் பேசி உள்ளார் என்று கூறி, கோட்டூர்புரம் காவல்துறை ஆய்வாளர் அஜூ குமார் புகார் அளித்தார். இதனால், சீமான் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.