தமிழகத்தில் 4 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராத நிலையில், தொடர்ந்து 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 5 வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த 5 வது ஊரடங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் 4 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளன.

இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் பேருந்துகளை இயக்க, தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மண்டலம் 7 மற்றும் 8 ல் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மண்டலங்களைத் தவிர, மற்ற மண்டலங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கத் தொடங்கி உள்ளன.

குறிப்பாக, பேருந்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல் படி 60 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், பயணிகள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிகள் அனைவரும் சமூக இடைவெளிவிட்டு அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப் போவதில்லை என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். அத்துடன், பேருந்துகள் எப்போதும் இயக்கப்படலாம் என்பது குறித்து, இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.