இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர், தேர்வுக்குழுத் தலைவருக்கான நேர்காணலின் போது ,“தோனியின் எதிர்காலம் என்ன?, கேப்டன் விராட் கோலியை எப்படிக் கையாள்வீர்கள்?” என்று சிக்கலான 2 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் வீரர்களைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழுத் தலைவருக்கான நேர்காணலை, இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் நேற்று நடத்தினர்.

இதில், சுமார் 40 விண்ணப்பங்கள் பெறப்பட்டு லக்‌ஷமண் சிவராமகிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி, ராஜேஷ் செளகான், ஹர்விந்தர் சிங் ஆகியோர் இறுதிக்கட்ட நேர்காணலுக்குத் தேர்வானார்கள்.

அதன்படி தேர்வுக்குழு தலைவராக சுனில் ஜோஷியும், தேர்வுக் குழு உறுப்பினராக ஹர்விந்தர் சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தேர்வுக்குழுத் தலைவருக்கான நேர்காணலின் போது 2 முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இதில் பதில் சொல்ல முடியாமல் பலரும் திணறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, “உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்கும் தோனி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காகப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவரை அணியில் மீண்டும் சேர்க்க வேண்டியநிலை ஏற்படும். ஆனால், 38 வயதில் அவரை தேர்வு செய்தால், இளம் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் மீதான பார்வை எப்படி இருக்கும்? இதனால், தோனியின் எதிர்காலம் பற்றி என்ன முடிவு செய்வீர்கள்?” என்று சிக்கலான கேள்வியை எழுப்பி உள்ளனர்.

அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை கையாளுவது மிகவும் சிரமம். காரணம், ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே நீக்கப்பட்டது முதல், ரவி சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக வந்தது வரை, விராட் கோலியின் தலையீடுகள் அதிகம் இருந்ததாகப் பேசப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், விராட் கோலியை கையாளுவது சிரமாக இருக்கும். அவரை எப்படி கையாள்வீர்கள்?” என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

இந்த சிக்கலான 2 கேள்விகளுக்கும் மற்றவர்களைக் காட்டிலும், சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங் ஆகியோர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி, நல்லதொரு பதிலை அளித்ததால், தேர்வுக்குழு தலைவராக சுனில் ஜோஷியும், தேர்வுக் குழு உறுப்பினராக ஹர்விந்தர் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.