சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பயங்கரமான காட்டுத் தீ, கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதனால், அங்குள்ள வனப்பகுதியில் வசித்து வந்த ஏராளமான உயிரினங்கள் அழிந்து வருகிறது.

இதனால், அந்நாட்டு அரசு காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் இந்த தீ விபத்தில் இதுவரை 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தீயை உடனடியாக அணைக்காவிட்டால், உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

அத்துடன், காட்டுத் தீயை அணைக்க பல லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, அங்குள்ள தெற்கு ஆஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் நிலவி வருகிறது.

இந்நிலையில், காட்டுத் தீயை அணைக்க அதிக அளவிலான தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருவதால், அந்நாட்டில் தண்ணீர் பஞ்சம் மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், அந்த பகுதியில் ஏராளமான ஒட்டகங்கள், தடுப்பு வேலிகளைத் தாண்டி, குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தண்ணீரை குடித்துச்செல்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்த சூழலை சமாளிக்கும் விதமாக, ஆஸ்திரேலியா அரசு, சில அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, தண்ணீரை அதிகம் உறிஞ்சி, மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படுத்துவதாக கூறி, சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆஸ்திரேலியாவில் சுமார் 10 லட்சம் ஒட்டகங்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் 10 ஆயிரம் ஒட்டகங்களை அரசே கொல்லப்போவதா கூறப்படுவது, உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.