இந்தியாவுக்கு எதிராக முழங்கினால் இனி சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, “போராட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள் எல்லாம், நாட்டை உடைத்துவிடுவோம் என்பது போன்று பேசுகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களை நாம் சிறையில் அடைக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அப்படிப்பட்ட போராட்டக்காரர்களைக் காப்பாற்ற ராகுல் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் முயல்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், இது போன்று தேசத்திற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினால், இனி அவர்கள் எல்லாம் சிறை கம்பிக்குள் அடைக்கப்படுவார்கள் என்றும் சூளுரைத்தார்.

இதனால், இனி மத்திய அரசுக்கு எதிராகக் கூட கண்டன முழக்கங்களை எழுப்பினால் கூட, அவர்கள் அனைவரும் கைது செய்யப்படும் நிலை உருவாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.