கல்லூரியின் விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த நிவேதா, சேலம் அருகே உள்ள கருப்பூரில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கிப் படித்து வந்தார்.

Salem college girl commits suicide

இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்காக, கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் கடந்த 10 ஆம் முதல் ஊருக்குச் செல்லத் தொடங்கினர். 

அப்போது, நிவேதாவுடன் தங்கியிருந்த சக மாணவிகளும் ஊருக்குச் சென்ற நிலையில், நிவேதா ஊருக்குச் செல்லாமல் இருந்துள்ளார். 

அத்துடன், கடந்த 10 ஆம் தேதி இரவு அறைக்குள் சென்ற அவர், கடந்த 2 நாட்களாக ரூம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த பக்கத்து அறையில் தங்கியிருந்த சக மாணவிகள், ஜன்னல் வழியாக, உள்ளே பார்த்துள்ளனர். 

அப்போது, ரூமில் உள்ள மின் விசிறியில் நிவேதா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், கல்லூரியின் நிர்வாகத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பெண்ணின் ரூம் முழுவதும் சோதனையிட்டனர்.

அதில், 3 பக்க கடிதம், டைரி மற்றும் காதல் சின்னத்துடன் கூடிய பொருட்கள் சில கிடைத்தன. இதனால், அந்த பெண் காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும், தற்கொலைக்கு வேறு எதுவும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.