தமிழகத்தில் மேலும் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை நீங்களாக மற்ற மாவட்டங்களில் படிப்படியாக கொரோனாவின் கோரப் பிடி சற்று தளர்ந்து வருகிறது. ஆனாலும், சில மாவட்டங்களில் எந்த அறிகுறியும் இல்லாமல் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குன்றத்தூர் தாலுக்காவில் 6 பேருக்கும், வாலாஜாபாத் தாலுக்காவில் 4 பேர் என இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லையில் மேலும் 32 பேருக்கு இன்று கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால், கடந்த 20 நாட்களுக்குப் பிறகு, தற்போது கோவையில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, அந்த மாவட்ட மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் இன்று மட்டும் தற்போதுவரை மேலும் 91 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 4,98,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 5,31,179 பேர் கைது செய்யப்பட்டு, விடுக்கப்பட்டுள்ளனர். 4,22,867 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஊரடங்கு விதிமீறலால் இதுவரை 7.85 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.