ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஏ.டி.ஜி.பி. ரவி கவலைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதனால், காவல் நிலையங்களில் நாள் தோறும் பதிவாகும் வழக்குகள், தற்போது பெரும்பாலும் பதிவாகவில்லை. அதே நேரத்தில், 1091, 181 போன்ற சேவைகள் மூலம் குடும்ப வன்முறை தொடர்பாகப் பல புகார்கள் பதிவாகி இருப்பதாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

இது தொடர்பாக கடந்த மாதம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.டி.ஜி.பி. ரவி, “ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், “ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக” ஏ.டி.ஜி.பி. ரவி கூறியுள்ளார்.

“குடும்ப வன்முறை தொடர்பான 5,740 புகார்களில், 5,702 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஏ.டி.ஜி.பி. ரவி, குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு, உடனடியாக கவுன்சிலிங் வழங்கப்படுவதாகவும்” குறிப்பிட்டார்.

குறிப்பாக, தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாகப் பதிவான புகார்களில் அதிகபட்சமாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,424 புகார்களும், நெல்லை மாவட்டத்தில் 702 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும்” ஏ.டி.ஜி.பி. ரவி தெரிவித்தார்.

இதனிடையே, பெண்கள் தொடர்பான புகார்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தமிழக அரசு மனநல ஆலோசகர்களை மாவட்ட வாரியாக கடந்த மாதம் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.