கன்னியாகுமரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர், அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 66 வயது மரியஜான், கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இதனிடையே, கொரோனா காரணமாக கன்னியாகுமாரிக்கு திரும்பிய அவர், அவரது வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, மரியஜானுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருமலால் அவர் கடும் அவதியடைந்து வந்தார். இதனால், அவர் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வந்துள்ளது.

அத்துடன், மரியஜான் ரத்த மாதிரிகள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மரியஜான் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

அதேபோல், மரியஜான் அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த முட்டம் பகுதியைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தையும், திருவட்டார் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரும் அடுத்தடுத்து தற்போது உயிரிழந்தனர். இதனால், கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, கொரோனா வார்டில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, சுகாதாரத்துறையினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி, “ 2 வயதுக் குழந்தை பிறவி எலும்பு நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 24 வயது இளைஞர் நிம்மோனியா தொற்று ரத்தத்தில் கலந்து நச்சுத்தன்மையாக மாறியதால் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மரியஜான் சிறுநீரக நோய் காரணமாக உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இந்த 3 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், ஆய்வறிக்கைகள் வந்த பிறகே உறுதியான முடிவுக்கு வர முடியும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.