இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்டார்க்டிகாவைத் தவிர மற்ற 6 கண்டங்களைச் சேர்ந்த 76 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், “இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் 16 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பதாகவும், அவர்கள் ஆக்ராவில் சுற்றுலா சென்று வந்ததாகவும், இதனால், ஆக்ராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

அதேபோல், கேரளாவில் 3 பேருக்கு கொரானா தொற்றும், டெல்லியில் ஒருவருக்கு கொரானா வைரஸ் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

மேலும், “கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக, இன்று காலை அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது என்றும், இன்று மாலை மத்திய அமைச்சரவை கூடி கொரோனா வைரஸ் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படும்” என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார்.

அத்துடன், கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில், டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் இனி தீவிரமாகப் பரிசோதனை செய்யப்படுவார்கள்” என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

இதனிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை டெல்லி, சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் இருப்பதாக சிலர் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அரசு சார்பில் எந்த ஒரு உறுதியான தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்தியாவில் சுமார் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளது, பொதுமக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.