சென்னை அண்ணாசாலை ரகேஜா டவரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி. கட்டடம் அருகில் உள்ள 11 மாடிகள் கொண்ட, ரகேஜா டவரில் பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. 

Fire breaks out in Raheja Tower Anna Salai Chennai

இந்நிலையில், கட்டிடத்தின் 3 வது தளத்தில், இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயணைப்பு கருவிகள் கொண்டு, அங்குள்ள ஊழியர்களே, தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீயை அணைக்க முடியாததால், அந்த தளத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு, கீழே இறங்கி ஓடிவந்தனர்.

மேலும், கட்டத்தில் தீ பரவியதால், தீ அலாரம் ஒலித்துள்ளது. இதனால், கட்டிடத்தின் 11 மாடியிலும் உள்ள மொத்த ஊழியர்களும், கட்டடத்தின் தரை தளத்திற்கு மின்னல் வேகத்தில் ஓடி வந்துள்ளனர்.

இதனிடையே, தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ரகேஜா டவரில் தீ பற்றி எரிந்த 3 வது தளத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். 

 

அத்துடன், மேல் மற்றும் கீழ்த் தளங்களுக்கு தீ மேலும் பரவாத வண்ணம், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். சிறிது நேரம் போராட்டத்திற்குப் பிறகு, தீயரணப்புதுறையினர்  தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து, தீயை அணைத்தனர். இதனையடுத்து, அனைத்து ஊழியர்களும் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

தீ விபத்து குறித்து, போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ரகேஜா டவரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அண்ணாசாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.