அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,569 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவின் கோர பிடியில் உலகமே சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், உலக வல்லரசு நாடான அமெரிக்கா மிகப் பெரிய இழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது.

உலகிலேயே கொரோனாவுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா தான் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு, அமெரிக்காவில் நாளுக்கு நாள் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வண்ணம் உள்ளன.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,569 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்ப எண்ணிக்கை என்பது, இதுவரை அமெரிக்காவில் இல்லாத நிலை என்றும், மற்ற உலக நாடுகளில் கூட இல்லாத ஒரு மோசமான சூழல் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 648 பேருக்கும், அங்குள்ள நியூஜெர்சி நகரில் 71 ஆயிரத்து 30 பேருக்கும் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதேபோல், நியூயார்க்கில் 11 ஆயிரத்து 586 பேரும், நியூஜெர்சியில் 3 ஆயிரத்து 156 பேரும் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இதுவரை 6 லட்சத்து 44 ஆயிரத்து 89 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், இதுவரை அமெரிக்காவில் 28 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 48 ஆயிரத்து 701 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.