ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சற்று வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, 144 தடை உத்தரவு மிக கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக போலீசாரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது 2 வது நிலையில் இருப்பதாகவும், அது 3 வது நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி நேற்று எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து, கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இனி 3 நாட்களுக்கு மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரும் தடை உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றித் திரிவதாகக் கூறப்பட்டு வந்தது.

இதனால், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய 1 லட்சத்து 35 ஆயிரத்து 734 பேரை, தமிழக போலீசார் கைது செய்து, பின்னர் அவர்களை ஜாமீனில் விடுத்துள்ளனர்.

அதேபோல், இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 708 வழக்குகள் தற்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தடை உத்தரவை மீறி செயல்பட்டவர்களிடமிருந்து இதுவரை 45 லட்சத்து 13 ஆயிரத்து 444 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.