கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்கள் அளவில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது: “கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் இரண்டும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவல், ஒமிக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளே முடிவு எடுத்து, சூழலை ஆய்வு செய்து தேவைப்பட்டால் உள்ளாட்சி அளவில் அல்லது மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம்.

பண்டிகைக் காலங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இரவு நேர ஊரடங்கு அல்லது மக்கள் கூடுவதைத் தவிர்க்க 144 தடை உத்ததரவு உள்ளிட்டவற்றை பிறப்பிக்கலாம்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்படுகிறது.

அனைத்து இடங்களிலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்த வேண்டும். பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய வழிகாட்டுதல்களை கைவிட்டு விடக்கூடாது.

நாட்டில் 2022 ஜனவரி 31-ம் தேதிவரை பேரிடர் மேலாண்மைச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், சட்டத்தை மீறுவோர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்டா வகை வைரஸை விட 3 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் கொரோனா தடுப்பு பணிக்கு பெரும் சவாலாக உள்ளது என்றும், குறிப்பாக பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அதன் பரவல் விகிதம் தீவிரமாக உள்ளது எனவும் உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் 578 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், உலகத்தில் 116 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா கூறியுள்ளார்.

இதற்கிடையில் இந்தியா எந்த சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக மாநிலங்கள் தங்கள் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களின் மருத்துவ கட்டமைப்பினை பலப்படுத்த வேண்டும் எனவும், ஆக்சிஜன் மற்றும் தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.