“செல்போனில் டிஸ்பிளே ப்ராப்ளம் காரணமாக, என் அந்தரங்க புகைப்படங்கள் என் நண்பனுக்கு போனதால் அவன் என்னை டார்ச்சர் பண்றான் சார்” என்று, இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் கதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் புதிய புதிய கண்டுபிடிப்புகளால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவுக்குத் தீமைகளும் இருக்கின்றன என்பதற்கு இந்த சம்பவமும் கூடுதல் சாட்சியாக அமைந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அடுத்து உள்ள கர்வே நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் தான், தற்போது பாதிக்கப்பட்டு உள்ளார். கர்வே நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம் பெண், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது மூழ்கி இருப்பது வழக்கம். அப்போது, சமூக வலைத்தளம் மூலம், புனேயை சேர்ந்த ஒரு ஆண் நண்பர் அந்த பெண்ணிற்கு அறிமுகம் ஆகி உள்ளார்.

இதனால், இருவரில் யார் எந்த பதிவு போட்டாலும், இருவரும் மாறி மாறி லைக் செய்வதும், கமெண்ட் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதனால், முகம் தெரியாத இந்த இருவருக்குள்ளும் ஒரு வித ஈர்ப்பும், நெருக்கமும் அதிகரித்தது.

இருவரும் அதிகம் நெருக்கமானது அடுத்து, தங்களது செல்போன் எண்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர். இதனால், சமூக வலைத்தளங்களைத் தாண்டி, இருவரும் போனில் முகம் தெரியாமல் மேலும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அந்த இளம் பெண்ணின் செல்போனில் திடீரென்று டிஸ்பிளே ப்ராப்ளம் ஆகி உள்ளது. இதன் காரணமாக, அந்த செல்போனில் டச் சரியாக வேலை செய்ய வில்லை என்று கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அந்த இளம் பெண், தன்னுடைய போனில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்படியோ, தவறுதலாக அந்த இளைஞருக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அந்த இளம் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன், அதன் பிறகு அந்த பெண்ணிற்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டத் தொடங்கி உள்ளான். அவன் கேட்கும் போதெல்லாம் அந்த பெண் தொடக்கத்தில் பணம் கொடுத்துள்ளதாகவும், ஆனால் அவன் தொடர்ந்து மேலும் மேலும் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால், ஒரு கட்டத்திற்கு மேல் பணம் கொடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், அந்த இளம் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதனால், பயந்துபோன அந்த இளம் பெண், அங்குள்ள காவல் நிலையத்தில், இது தொடர்பாகப் புகார் அளித்தார்.

அந்த புகாரில், “அந்த இளைஞரை இது வரை நான் சந்தித்ததே இல்லை என்றும், அந்த இளைஞரின் உண்மையான பெயர் கூட எனக்குத் தெரியாது” என்றும், அந்த இளம் பெண் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த இளைஞனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.