“நேருவின் இந்தியாவில் தற்போது பாதிக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றம் போன்ற கிரிமினல் புகார்கள் உள்ளன” என்று, மிக கடுமையாக விமர்சித்த சிங்கப்பூர் பிரதமருக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அதாவது, சிங்கப்பூரில் தொழிலாளர் கட்சியின் எம்.பி ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றம்சாட்டு ஒன்று, அந்நாட்டில் பூதகரமாக வெடித்து கிளம்பி உள்ளது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 15 ஆம் தேதி அன்று செவ்வாய்க் கிழமை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், “சுதந்திரத்திற்காகப் போராடி வென்றத் தலைவர்கள், பெரும் தைரியம், மகத்தான கலாசாரம் மற்றும் சிறந்த திறன் கொண்ட தலைவர்களாக இருந்தார்கள்” என்று, புகழாரம் சூட்டினார்.

“அப்படியான தலைவர்களில் டேவிட் பென் குரியன்ஸ், ஜவஹர்லால் நேரு போன்றோர்கள் குறிப்பிடத்தக்க தலைவர்களே” என்றும், அவர் புகழராம் சூட்டினார்.

அத்துடன், “ஒரு நாட்டை பொதுவாகவே உருவாக்கும் தலைவர்கள், தங்கள் மக்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், தங்கள் மக்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும் பெரும் சிரமம் மேற்கொண்டனர் என்றும், ஆனால் அந்த அந்த தலைவர்களுக்கு பின்னால் வந்த அடுத்தடுத்த தலைமுறைகள் அதனை தக்கவைத்துக்கொள்வதில்லை” என்றும், தனது கவலையை பதிவு செய்தார்.

மேலும், “காலப்போக்கில், அரசியலின் அமைப்பு மாறுகிறது, அரசியல்வாதிகள் மீதான மரியாதை குறைகிறது. அதன் தொடர்ச்சியாக, வாக்காளர்களும் இது தான் விதிமுறை என்று நினைக்கிறார்கள் என்றும், தர நிலைகள் சீரழிந்து, நம்பிக்கை சிதைந்து, நாடு மேலும் வீழ்ச்சியடைகிறது” என்றும், தனது வேதனையை தெரிவித்தார்.

குறிப்பாக, “நேருவின் இந்தியாவில் தற்போது ஊடக அறிக்கைகளின் படி, நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்டப் பாதி எம்பிக்கள் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கிறது” என்றும், வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி பேசினார்.

இதில், பல அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றாலும், இன்னும் இந்த நிலைதான் அங்கு உள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார்.

முக்கியமாக, “இதே பாதையில் சிங்கப்பூரை பயணிக்க விடாமல் தடுக்கவேண்டும்” என்றும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பேசினார்.

இதனால், கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, சிங்கப்பூர் தூதுவரை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

அதே போல், சிங்கப்பூர் பிரதமரின் இந்த பேச்சுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இது குறித்து விளக்கம் கேட்டு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங்குக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.

இதனிடையே, இந்திய எம்.பி.க்கள் மீதான சிங்கப்பூர் பிரதமரின் விமர்சனம், இணையத்தில் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.