காதலில் நம்பிக்கையை பெற, தனது காதலியின் கை மற்றும் கால்களை தன்னுடைய காரின் மேல் பகுதியில் படுக்கவைத்துபடி கட்டி வைத்து, காரை ஓட்டிச் சென்ற காதலனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா நாட்டில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பலரும், தங்களது துணையின் நம்பிக்கையைப் பெற வித விதமான முயற்சிகளை மேற்கொண்டு, தங்களது காதலின் ஆழத்தைத் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். 

அப்படியாக, தனது காதலியின் நம்பிக்கையைப் பெற, காதலன் செய்த விபரீத நிகழ்வு ஒன்று, உலகம் முழுவதும் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

அதாவது, ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலிக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கையைத் தெரிந்துகொள்ளப் புதிதாக ஒரு விநோதமான யோசனையைக் கூறி, அதனைச் செயல்படுத்த முற்பட்டிருக்கிறார்.

இதனைக் கேட்டுக்கொண்ட அவருடைய காதலியான அந்த இளம் பெண், காதலன் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக, காதலின் இந்த யோசனைக்கு “சரி, அப்படியே செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அதன் படி, அந்த காதலன், தன்னுடைய காரின் மேல் பகுதியில் தன்னுடைய காதலியைப் படுக்கவைத்து, அவரது கை மற்றும் கால்களைத் தனது காருடன் சேர்த்து கயிற்றால் கட்டி உள்ளார்.

இதனையடுத்து, காரில் படுக்கவைத்து கயிற்றால் கட்டப்பட்ட தனது காதலியை, அந்த பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அதி வேகமாக ஓட்டிச் சென்றிருக்கிறார் அந்த காதலன். இந்த காட்சிகளை, அந்த வழியாகச் சென்ற பலரும், தங்களது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டனர். 

அத்துடன், இதனை வீடியோவாகவும் பதிவு செய்த அந்த காதலன், தனது சமூக வலைத்தள பக்கத்திலும் அந்த வீடியோவை பதிவிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக, சமூக வலைத்தளத்தில் கிட்டதட்ட 5 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்ட அவர், “Trust Test” என்று குறிப்பிட்டு, இந்த வீடியோவை தன்னுடைய சமூக ஊடகத்தின் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்த வீடியோவானது, அந்நாட்டின் பலரது கவனத்தையும் பெற்றுள்ள நிலையில், பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வீடியோ அந்நாட்டின் போலீசாரின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த நபரை கண்டுபிடித்து, சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக அந்நாட்டின் போக்குவரத்து போலீசார் அவருக்கு 750 ருபெல் அபராதம் விதித்தனர்.

முக்கியமாக, அந்நாட்டின் சிறுவர் சிறுமிகளுக்கு இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பதாகவும், அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து 
தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும், அந்நாட்டு போலீசார் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், வெறும் அபராதத்துடன் அந்த காதலன் தப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.