ஜப்பான் கடற்கரையில் மனித எலும்புக் கூடுகளுடன் அமானுஷ்யங்கள் நிறைந்த வட கொரிய கப்பல்கள் கரை ஒதுங்குவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜப்பான் நாட்டின் கடற்கரை பகுதிகளில் நூற்றுக் கணக்கான வட கொரிய படகுகள், மனித எலும்புக் கூடுகளுடன் அச்சமுறுத்தும் வகையில் கரை ஒதுங்குவதற்குச் சீனாவின் சதியே காரணம் என்று ஜப்பான் தன் தரப்பு குற்றச்சாட்டை முன் வைக்கின்றன.

ஜப்பான் நாட்டின் கடற்கரையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கிட்டத் தட்ட 600 ஆதரவற்ற படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 150 படகுகள் ஜப்பான் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, “கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத்தில் ஜப்பானின் சாடோ தீவுக்கு அருகே மரத்திலான படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. அந்த படகில், துண்டிக்கப்பட்ட நிலையில் 2 பேரின் தலைகளும், 5 பேரின் எலும்புக்கூடுகளும் அச்சமுறுத்தும் வகையில் இருந்ததாகவும்” ஜப்பான் அரசு குற்றம்சாட்டி உள்ளது.

இது போன்ற சம்பவங்கள் ஜப்பான் கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இது குறித்து சர்வதேச விசாரணை தற்போது தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, “கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 வட கொரியர்களின் சடலங்கள் ஜப்பான் நாட்டில் கரை ஒதுங்கியுள்ளதாகவும்” ஜப்பானின் கடலோர பாதுகாப்புப்படை பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளது.

அதற்குக் காரணம், “வட கொரியக் கடலில் சட்ட விரோதமாக மீன் பிடிக்கச் சீனா தனது ஆயுத பலத்துடன் கூடிய தொழில் துறை கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. இதன் காரணமாக, நம்பிக்கையற்ற வட கொரிய மீனவர்கள் பாதுகாப்பற்ற படகுகளில் அதிக தொலைவு தூரம் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதன் மூலம் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வருகின்றனர்” என்றும், ஜப்பானின் கடலோர பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், “கடலின் சீற்றம் தாங்க முடியாமல் பல வட கொரிய மீனவர்கள் கரை திரும்பாமல் போனதாகவும், ஒரு பக்கம் சீனாவின் ஆதிக்கத்தைக் கண்டு கொள்ளாத கிம் அரசு, மறுபக்கம் உணவு தட்டுப்பாட்டைச் சமாளிக்க மீனவர்களைக் கடலுக்குச் செல்ல கட்டாயப்படுத்தி வருவதாகவும்” ஜப்பான் கவலைத் தெரிவித்துள்ளது.

மேலும், “கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் கடல் அலைகளில் சிக்கி, படகு கவிழ்ந்து, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுமார் 50 வட கொரிய மீனவர்களை ஜப்பானிய கடற்படை அதிகாரிகள் மீட்டுள்ளனர்” என்றும், ஜாப்பான் கடலோர பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், சர்வதேச மீன் பிடி கண்காணிப்பு அமைப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், “சீன வம்சாவளியைச் சேர்ந்த 900 க்கும் மேற்பட்ட கப்பல்கள், கடந்த 2017 ஆம் ஆண்டில் சட்ட விரோதமாக மீன் பிடித்ததாகவும், 2018 ஆம் ஆண்டில் 700 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீன் பிடித்ததாகவும்” குற்றம்சாட்டி உள்ளது. 

“இவை அனைத்தும் மொத்தமாகச் சேர்ந்து 160,000 மெட்ரிக் டன்னை விட அதிகமாக மீன் பிடிபட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், இவை 346 மில்லியன் டாலர் மதிப்புடையவை” என்றும், தெரிவித்துள்ளது.

மேலும், “வட கொரியா கடற்பகுதிகளில் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கும் ஐ.நா. மன்றத்தின் பொருளாதாரத் தடைகளைச் சீனா மீறியிருக்கலாம் என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்” என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.