கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா, நேற்று இரவு காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் மரணம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மாரடோனாவுக்கு, வயது 60. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 60ஆம் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடினார் மாரடோனா. பிறந்தநாளுக்குப் பிறகிருந்தேவும் அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்பட்டது. 

இதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் கட்டி இருப்பதாக தெரிவித்தனர். பிறகு அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அது வெற்றிகரமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார் மாரடோனா.

தனது 16ஆவது வயதில் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக அறிமுகமான மாரடோனா, கால்பாந்தாட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார். 1986ஆம் ஆண்டில் அர்ஜென்டீனாவுக்கு இரண்டாவது உலக கோப்பை கிடைப்பதில் மாரடோனாவின் அபாரமான ஆட்டம் காரணமாக இருந்தது. 

1986-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர். 4 உலக கோப்பை போட்டியில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்றவரான அவர் அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்து இருக்கிறார்.

10-ம் நம்பர் சீருடைக்கு தனி மரியாதை சேர்த்த அவர் ஓய்வுக்கு பிறகு அர்ஜென்டினா உள்பட பல்வேறு அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றினார். அத்துடன் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்றார். இந்த நிலையில் 60 வயதான மரடோனா கடந்த 2-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவசரமாக ஆபரேஷன் செய்யப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார்.

கால்பந்தாட்டத்தில் இந்தளவுக்கு சிறந்தவராக இருந்த மரடோனாவின் மறைவையொட்டி அர்ஜென்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் உள்பட பலரும் மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மறைவுக்கு, உலகளாவிய அவரது ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கால்பந்து வீரர் மரடோனாவின் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வாழ்நாள் முழுவதும், கால்பந்து மைதானத்தில் சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்குக் கொடுத்த மரடோனாவின் அகால மறைவு, அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக, பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.