பாகிஸ்தானில் தன் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்காத ஆத்திரத்தில், 14 வயது சிறுமி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த முகமது யூசுப் என்பவரது 14 வயது மகளான சாதியாவை, அவரது சகோதரரான முகமது யாகூப் என்பவர்,  தனது மகனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் கேட்டுள்ளார்.

அப்போது, மகளுக்கு 14 வயது தான் ஆகிறது என்றும், இப்போது திருமணம் செய்து வைக்க முடியாது என்றும், முகமது யூசுப் தனது சகோதரர் முகமது யாகூபிடம் கூறி உள்ளார்.

ஆனால், யாகூப் தொடர்ந்து தனது சகோதரரை தொந்தரவு செய்துள்ளார். தொடர்ந்து பெண் கேட்டு நச்சரித்துள்ளதாகத் தெரிகிறது. அப்போத, “தன் மகள் சாதியாவை ஏற்கனவே வேறொரு உறவினருக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக நான் வாக்குக் கொடுத்து விட்டேன்” என்று முகமது யூசுப் தெரிவித்துள்ளார்.

இதனால், கடும் ஆத்திரம் அடைந்த முகமது யாகூப், தன் சகோதரரிடம் கடும் வாக்கு வாத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர்களது உறவினர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், அடுத்த சிறிது நேரத்தில், தன் மகனுக்குப் பெண் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் ஆத்திரமடைந்த யாகூப், தன் சகோதரர் வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு இருந்த சாதியா மீது, அவர் பெட்ரோலை ஊற்றி, கண் இமைக்கும் நேரத்திற்குள் தீ வைத்துள்ளார். இதில், சாதியா உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், அவர் வலியால் கதறி துடித்து, இங்கும் அங்குமாக ஓடி எப்படியோ அங்கிருந்து தப்பி வெளியே ஓடி உள்ளார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாதியாவுக்க தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சாதியாவுக்கு அதிகபட்ச தீ காயங்கள் இருந்ததால், அடுத்த சிறிது நேரத்தில் சாதியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். ஆனால், சாதியாவின் குடும்பத்தினர் இந்த கொலையை போலீசாரிடம் மறைக்கப் பார்த்துள்ளனர். 

இதனையடுத்து, அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தியதில், ஒவ்வொருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் தங்கள் ஸ்டைலில் விசாரித்த நிலையில், 14 வயது சிறுமியை யாகூப் தீ வைத்து எரித்துக்கொன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து, முகமது யாகூபை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை தன் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வில்லை என்பதற்காக, உறவினர் ஒருவரே, அந்த சிறுமியை தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.