தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வரும் தல அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் வலிமை. இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் தயாரிப்பில் உருவான வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு(2022) பொங்கல் விருந்தாக வலிமை திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் வீட்டின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த பெண்ணை தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ஃபர்சானா என்ற அந்தப் பெண் தனது இந்த முடிவுக்கு காரணம் நடிகர் அஜித்குமார் தான் என புலம்பியபடி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை ஷாலினி இருவரும் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தபோது, அங்கே பணியாற்றிய ஃபர்சானா நடிகர் அஜீத் குமாரை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது.

இதனை தொடர்ந்து நடிகை ஷாலினி மருத்துவமனை நிர்வாகத்திற்கு போனில் அழைத்து இவரது பணியை மீண்டும் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் வேறு சில காரணங்களுக்காக மருத்துவமனை நிர்வாகம் அந்தப் பெண்ணை மீண்டும் பணியில் சேர்க்கவில்லை. எனவே நடிகர் அஜீத் குமாரை நேரில் சந்திக்க வேண்டி ஃபர்சானா அஜித் குமாருக்கு ஈ-மெயில் அனுப்பியுள்ளார்.

நடிகர் அஜித் குமாரிடம் இருந்து எந்த பதிலும் வராததால், ஈஞ்சம்பாக்கம் இருக்கும் நடிகர் அஜித்குமார் வீட்டின் முன்னால் ஃபர்சானா தீக்குளிக்க முயன்ற போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதுகுறித்து நடிகர் அஜித்குமார் தரப்பு விளக்கம் மற்றும் இதர தெளிவான தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.