தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தவர் கேப்டன் விஜயகாந்த். மேலும் இவர் தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி ஈடுபட்டு வருகிறார். கடந்த சில வருடங்களாக உடல்நல குறைபாடு காரணமாக சினிமா மற்றும் அரசியலில் பெரிய அளவில் நாட்டம் இல்லாமல் இருந்து வரும் விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். முதல் முறையாக இளைஞர்களுக்காக, பாடி நடித்துள்ள புரட்சி பாடலின் FIRST LOOK போஸ்டரை இன்று விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இளைஞர்களின் எழுச்சிக்காக  முதன்முறையாக தனிஇசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு ஜெஃப்ரி இசையமைத்துள்ளார். இப்பாடலைப் பற்றி விஜய பிரபாகரன் கூறுகையில்..தமிழை என்னுயிர் என்பேன் நான்...தமிழ் இளைஞர்கள் எல்லோரும் என் உயிர் தோழர்கள் ஆவார்கள் என்றவர், இந்த பாடல் முழுக்க முழுக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் திரைப்படத்தில் நடித்தார். கடந்த 2015-ம் ஆண்டு சகாப்தம் எனும் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மதுர வீரன் எனும் படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் மித்ரன் எனும் படம் உருவாகி வருகிறது. தற்போது இவரது சகோதரர் independent பாடகரானது குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். 

தற்போது இருக்கும் இசையுலகில் தனிஇசைப்பாடலுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. முதல் பாடலிலே இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப விஜய பிரபாகரன் பாடியிருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.