இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர் இந்த படத்தை தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக கடந்த ஆண்டு செய்திகள் வெளியானது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்று அப்போதே நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி தெளிவு செய்தார். 

இப்படம் குறித்து லாக்டவுனில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய விஜய்சேதுபதி, படத்தில் நான் நடிப்பது நிச்சயம். நான் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது கூட இல்லை. எனக்கு கிரிக்கெட்டை பார்த்தால் போர் அடிக்கும். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது இல்லை. சொல்லப் போனால் இதை தான் முத்தையா முரளிதரனிடம் கூறினேன். அதற்கு அவரோ, என் கதாபாத்திரத்தில் நடிக்க இது தான் சிறந்த தகுதி என்று கூறினாராம். 

இந்த படத்தின் டைட்டில் 800 என்று கூறப்படுகிறது, இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே டைட்டில் தெரியவரும். படத்தில் நடிக்க விஜய்சேதுபதி உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறாராம். இதற்காக சிறப்பு பயிற்சியாளர் ஒருவரை நியமித்துள்ளார் என்றும் செய்திகள் வெளிவருவதை காணமுடிகிறது. ராணா தயாரிக்கும் 800 படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். 

சமீபத்தில் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார் என்ற ருசிகர செய்தி தெரியவந்தது. புரியாத புதிர், விக்ரம் வேதா போன்ற படங்களுக்கு பிறகு விஜய்சேதுபதி படத்திற்கு இசையமைக்கிறார் சாம் சி.எஸ். கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சுழற்பந்து வீச்சாளர். அவரது பௌலிங் ஆக்ஷனில் ஒரு தனி ஸ்டைல் இருக்கும், அதை விஜய்சேதுபதி எப்படி கற்றுக்கொண்டு படத்தில் வெளிப்படுத்திகிறார் என்பதை காண ஆவலாக உள்ளனர் கிரிக்கெட் பிரியர்கள். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. 

கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் குட்டி லவ் ஸ்டோரி ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து டாப்ஸி நடிக்கும் படத்தில் நடித்துள்ளார். 

தற்போது லாபம் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், விருமாண்டியின் க.பெ. ரணசிங்கம், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், டெல்லி பிரசாத் தீனதயாளனின் துக்ளக் தர்பார், அமீர்கானுடன் லால் சிங் சத்தா போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது.