தமிழ் திரையுலகின் மக்கள் செல்வியாக திகழ்பவர் வரலக்ஷ்மி சரத்குமார். தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இருக்கும் சினிமா ட்ரெண்டில், போல்டான கதாபாத்திரங்களை நடிக்கிறார் வரலக்ஷ்மி. தளபதி விஜய்யுடன் சர்க்கார் படத்திலும், தனுஷுடன் மாரி 2 படத்திலும் இவர் நடித்த பாத்திரத்தை மறக்க முடியாது. தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் வரலக்ஷ்மி. 

சென்ற லாக்டவுனின் இறுதி கட்டத்தில், வெளியூர் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி உதவி செய்தார் வரலக்ஷ்மி. சமூக வலைதளங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது மட்டுமின்றி அதிக தேவை இருக்கும் மக்களுக்கும் அவர் உதவி வருகிறார். சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக பசியால் வாடும் நாய், மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கும் வரலட்சுமி சரத்குமார் அவரது தாய் சாயா தேவி உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்கள். 

வரலக்ஷ்மியின் நடிப்பில் டேனி திரைப்படம் வெளியானது. நேரடியாக Zee5 தளத்தில் வெளியான இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சந்தான மூர்த்தி இயக்கியிருந்தார். பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்தார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடித்திருந்தனர். க்ரைம் திரில்லராக உருவான இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். 

சமீபத்தில் வரலக்ஷ்மி சரத்குமாரின் கண்ணாமூச்சி படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் அவர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருந்த சேஸிங் படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தை வீரகுமார் இயக்குகிறார். மதியழகன் முனியாண்டி தயாரிக்கிறார். தசி இசையமைக்கும் இந்த படத்திற்கு பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.பாலா சரவணன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டண்ட் காட்சிகளில் டூப் ஏதும் இல்லாமல் வரலக்ஷ்மியே நடித்துள்ளார் என்பது சிறப்பு தகவல். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.