தளபதி விஜயின் லியோ பட பிரம்மாண்ட ரிலீஸ் & அட்டகாசமான ப்ரோமோஷன் திட்டங்கள்... படக்குழு கொடுத்த அசத்தலான அப்டேட்!

தளபதி விஜயின் லியோ பட ரிலீஸ் மற்றும் ப்ரோமோஷன் திட்டங்கள்,Thalapathy vijay in leo movie release and promotion plans | Galatta

இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான முறையில் லியோ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கு ஏற்ப அட்டகாசமான ப்ரோமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாகவும் லியோ பட குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தனக்கென தனி பாணியில் அட்டகாசமான ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஐந்தாவது படத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து இருக்கிறார். முன்னதாக தளபதி விஜயின் திரை பயணத்தில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படம் அனைத்து இறுதிக்கட்ட பணிகளையும் முடித்து சென்சாரையும் முடித்து தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

நீண்ட இடைவெளிக்கு பின் தளபதி விஜய் உடன் லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோ பாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப் படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார்.

வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே லியோ திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்தப் படக் குழுவினர் அதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக அறிவித்தனர். அமெரிக்காவில் மட்டும் 1700 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் லியோ திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்திருந்த படக்குழுவினர், UKவில் ஆறு வாரங்களுக்கு முன்பே லியோ பட டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியதால் தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டு ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்திருப்பதாகவும் செய்திகள் வெளி வருகின்றன. 

இதனிடையே நேற்று (அக்டோபர் 5) பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு X எக்ஸ் பக்கத்தில் ஸ்பேசில் பேசிய, லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் SS.லலித் குமார் அவர்கள் “மொத்தமாக லியோ திரைப்படத்தை 25,000 லிருந்து 30,000 திரையரங்குகள் வரை மிக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் வட இந்தியாவில் மட்டும் 2000 திரையரங்குகளில் லியோ திரைப்படத்தை ரிலீஸ் செய்வதாகவும் தென்னிந்தியாவில் ஸ்பெஷலான ப்ரோமோஷன் பணிகளை தொடங்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும்” என்றும் அறிவித்துள்ளார். தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பால் தளபதி விஜயின் ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகமடைந்திருக்கின்றனர்.