திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ்,கார் ரேஸ் போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது வலிமை படப்பிடிப்பு இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது அவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள படங்களை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அஜித் தங்கப்பதக்கம் வென்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார். அதேபோல் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா அஜித்தின் ஓபனிங் பாடலை முடித்திருப்பதாகவும், விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் அந்தப் பாடல் குத்துப் பாடலாக அமைந்திருப்பதாகவும் ஒடிசாவிலிருந்து ட்ரம்ஸ் கலைஞர்களை அழைத்து வந்து பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பளார் யுவன்சங்கர் ராஜாவிடம் வலிமை அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், படத்தின் பாடல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மோஷன் போஸ்டர் உருவாக்கம் உள்ளிட்ட ப்ரோமோஷன் பணிகள்தான் இனி நடைபெற உள்ளன எனக் கூறினார்.