நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த உயிர்கொல்லி வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்து 46 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த கொரோனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக், விஷால், ராஜமவுலி உள்பட பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறினர். இந்த வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், குணசித்திர நடிகர் புளோரன்ட் பெரேரா கொரோனாவால் உயிரிழந்தார்.

தற்போது பிரபல தெலுங்கு காமெடி நடிகர் வேணுகோபால் கோசுரி கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குப் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது. இதையடுத்து கச்சிபவுலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து ஏராளமான திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராஜமவுலி இயக்கிய பல படங்களில் இவர் நடித்துள்ளார். மரியாத ராமனா, சலோ, பில்லா ஜமீந்தார், அமி துமி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல நாடகங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். வேணுகோபாலின் மறைவு தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா உயிர் இழந்தார். நடிகை ஜரினா வஹாப் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகபாபுவுக்கும், இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவுக்கும், ராமராஜனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இன்று காலை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. 

கொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது தீரும், இந்த 2020ம் ஆண்டு எப்பொழுது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை தகர்த்தாலும், இந்த வைரஸ் முற்றிலும் இல்லாமல் இருந்தால் தான் மக்களுக்கு இயல்பு நிலை.