சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இயக்கப்பட்ட இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இருப்பினும் திரையரங்கில் வெளியானதைப் போல பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது சூரரைப் போற்று படக்குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது. இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். அதன்படி ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பொதுப்பிரிவில் சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெறவேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள். இதைக் கேட்ட சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

சூர்யா அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கவிருக்கும் சூர்யா 40 படத்திற்கு தயாராகி வருகிறார். இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.