தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் வரவு கணிசமாக அதிகரித்திருக்கும் நிலையில் அவர்களின் திரைப்படங்கள் மனித உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. சில்லுக்கருப்பட்டி, கேடி, இறுதிச்சுற்று, சூரரை போற்று விக்ரம் வேதா போன்றவை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற படங்கள்.

அந்த வரிசையில் சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா சமீம் தனது அடுத்த படமான ஏலே படத்தின் ட்ரைலரை இன்று வெளியிட்டிருக்கிறார். ஐஸ் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சமுத்திரகனி. விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களில் நடித்த மணிகண்டன் சமுத்திரகனியின் மகனாக நடித்துள்ளார். சமுத்திரகனி கதாபாத்திரத்தின் மரணத்தை தொடர்ந்து நடக்கும் ஏகப்பட்ட விஷயங்களையும் ஏலே ட்ரைலர் தாங்கி வந்திருக்கிறது.

சில்லுக்கருப்பட்டி படத்தில் இருந்ததை போலவே நச்சென்ற வசனங்கள் ஏலே படத்திலும் இருப்பது டிரைலரிலேயே கண்கூடாக தெரிகிறது. இன்னைக்கா ? நாளைக்கா ? என அப்பாவை இழந்த மகனிடம் கேட்கும் வயதான பெரியவரிடம் இன்னிக்கி. நீங்க எப்படி? என நக்கலடிக்கும் வசனம் மற்றும், யாரு எமனா? ரெண்டு மாசம் கழிச்சு வா.. கல்யாண வேலை எல்லாம் இருக்கு என சொல்லும் தாத்தாவின் வசனமாகட்டும் அருமை.

கிராமத்துக் கதையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபீர் வாசுகி மற்றும் அருள் தேவ் இசையமைத்துள்ளனர். 

ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், புஷ்கர் காயத்ரியின் வால் வாட்சர் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.