தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் இத்திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையிலுள்ள ஈசிஆர்-ல் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் நல்ல தயாரிப்பாளராகவும் சிறந்த படைப்புகளை வழங்கி வரும் நடிகர் சூர்யா தயாரித்து நடித்து கடந்த ஆண்டு(2021) வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுக்களைப் பெற்றது.

இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா உடன் இணைந்து லிஜோமொள் ஜோஸ்,ராஜிஷா விஜயன் மற்றும் மணிகண்டன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ஜெய் பீம் திரைப்படம் உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதோடு பல விருதுகளையும் வென்று குவித்தது.

அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த தாதாசாஹேப் திரைப்பட விழாவிலும் ஜெய்பீம் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. மேலும் இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்த நடிகர் மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.