தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நகைச்சுவை ஜாம்பவானாக திகழ்ந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் தனது நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல் அதே நகைச்சுவையில் தனது உயர்ந்த கருத்துக்களை புகுத்தி சிந்திக்கவும் வைத்தார் .

நகைச்சுவையின் வாயிலாக  பல நல்ல கருத்துக்களை சொன்ன கலைவாணர் NSK-வின் வழியில் தனக்கே உரித்தான பாணியில் அந்தந்த காலகட்டத்தில் தேவையான சமூக நல கருத்துக்களை காமெடியாக தெளித்த விவேக் அவர்கள் சினிமாவை தாண்டி பொது வெளியிலும் சமூக பொறுப்புள்ள மனிதராகவே வலம் வந்தார்.

குறிப்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் இவர் முன்னெடுத்த மரக்கன்றுகள் நடும் பணியை தற்போது தமிழகத்தில் பல பலநூறு சமூகநல அமைப்புகள் மற்றும் நடிகர் விவேக்கின் ரசிகர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர். 

நடிகர் விவேக் அவர்கள் கடந்த ஆண்டு(2021) திடீரென மாரடைப்பால் காலமானார். விவேக் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி சில தினங்களுக்கு முன்பு அனுசரிக்கப்பட்டாலும் கூட விவேக் அவர்களின் மறைவை இன்றும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

என்றென்றும் மக்கள் மனதில் வாழும் மகத்தான கலைஞன் விவேக் அவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு விவேக் அவர்கள் வசித்த தெருவிற்கு சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயரிடுவதாக அரசாணை வெளியிட்டது.

அதன்படி தற்போது மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் வசித்த தெருவில் சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயரிடப்பட்ட பெயர் பலகையை தற்போது மாண்புமிகு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் திறந்து வைத்தார். சின்ன கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகை திறப்பு வீடியோ இதோ…