என்றென்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகவும் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராகவும் விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

முன்னதாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலர் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் சார்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பாபா திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸாக தயாராகி வருகிறது.

ரஜினிகாந்த் அவர்கள் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதிய பாபா திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாபா திரைப்படம் கடந்த 2002ம் ஆண்டு ரிலீஸான நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புது பொலிவுடன்  ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் 12ஆம் தேதி வெளியிட ரிலீசாக தயாராகி வருவதாக தெரிகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.