கடந்த 2019-ம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடை. அமலா பால் லீட் ரோலில் நடித்த இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது. விவேக் பிரசன்ன, ரம்யா ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு பிரதீப் குமார் மற்றும் ஊர்கா பேண்ட் குழு இசையமைத்தது. விஜய் கார்த்திக் கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். 

காமினி என்ற ரோலில் மீடியா வேலை பார்க்கும் பெண்மணியாக நடித்திருந்தார் நடிகை அமலா பால். மீடியாவில் பிராங்க் ஷோ நடத்தும் அமலா பால் நண்பர்களுடன் பெட்டிங்கில் ஈடுபட்டு, பிறகு அவர் சந்திக்கும் சோதனைகள் பற்றியும், அதிலிருந்து தன்னை எப்படி காப்பற்றிக்கொள்கிறார் என்பதில் மீதி கதை. ஆல் பாதி ஆடை பாதி என்பார்கள். இந்த இரு பாதி தான் ஆடை படத்தின் கதைச்சுருக்கம்.

தற்போது இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாவதை பார்க்க முடிகிறது. அமலா பால் நடித்த துணிச்சலான பாத்திரத்தில் நடிக்க ஷ்ரத்தா விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

இதற்கு முன் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கப்போகிறார் என்று இணையத்தில் செய்திகள் வந்தது. பிறகு அது போன்ற செய்திகள் ஏதும் இல்லை என்று ரீமேக் ரைட்ஸ் வைத்திருக்கும் நடிகர் அருண் பாண்டியன் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். நடிகர் அருண் பாண்டியனின் A&P குரூப்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வைத்துள்ளது. அவர்கள் தரப்பிலிருந்து முறையான அறிக்கை வெளியானால் மட்டுமே இந்த படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் தெரியவரும். 

கடைசியாக சுஜீத் இயக்கியிருந்த சாஹோ திரைப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்தார் ஷ்ரத்தா. நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷ்ராஃப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரித்த இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஆண்டு வெளியானது. இதில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய ஷ்ரத்தா, ஆடை ரீமேக் ஆனாலும் அதில் கச்சிதமாக நடிப்பார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.