தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகளில் அரசியல் கட்சிகள் அனைத்தும் முனைப்பு காட்ட தொடங்கி உள்ளனர். அப்படியன சூழலில்தான், அதிமுகவை சேர்ந்த, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யாரென்பது குறித்து பேசினார். அந்த விஷயம், மிகப்பெரிய பூதாகரமாகி, தமிழக அரசியல் சூழலை கேள்விக்குட்படுத்தி வருகிறது.

அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, `தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடியே முதல்வரை தேர்வு செய்வோம். அ.தி.மு.க. கொள்கையின்படி எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுக் கூடி யாரை முதல்வராக அறிவிக்கிறார்களோ, சொல்கிறார்களோ, அவர்தான் முதல்வர்' என சொல்லியிருந்தார்.

இந்தநிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதே கட்சியை சேர்ந்த மற்றொருவரான பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் வேறொரு பதிவை இட்டார். அதில் அவர், `எடப்பாடியார் என்றும் முதல்வர். இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021 நமதே' என்று கருத்து தெரிவித்திருந்தார். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து, இவர்கள் இருவரின் மாறுபட்ட கருத்துக்கள் அதிமுகவில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மேற்குறிப்பிட்ட இருவருக்கும் ஒட்டாத வகையில் மற்றொரு பதிலை கூறியிருக்கிறார். அவர் சொல்லியிருப்பது, ``மினி பொதுத்தேர்தல் என கருதப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் செயல்பட்டு வெற்றி பெற்றோம். ஆகவே எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை முன்னிறுத்தியே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. எளிமையின் அடையாளமான முதலமைச்சர் அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும். `இந்த அரசு பிழைக்குமா?' என கேள்வி எழுந்த சூழலில், தற்போது நிலையான அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வரை முன்னிறுத்தித்தான் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும். ஒற்றுமையுடன் அதிமுக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

உதயகுமாரின் கருத்துப்படி பார்த்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும். ராஜேந்திர பாலாஜி முன்னிறுத்தியது போலவே எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தியிருக்கிறார் ஆர்.பி.உதயகுமார். இருப்பினும், ஓ.பி.எஸ்.தான் எங்களுக்கான வழியை காட்டுவார் என கூடுதல் தகவலொன்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார்

முதல்வர் வேட்பாளர் குறித்து, அதிமுக- வை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ``எடப்பாடி பழனிசாமிதான் என்றும் முதல்வர் என கூறிய ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல. அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் கட்சி முடிவெடுக்கும். இந்த நேரத்தில் கருத்து தெரிவிப்பது அது பலவீனமாகிவிடும். எம்.ஜி.ஆர் ஆட்சி, அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும், மலர வேண்டும்" என்று பதில் சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த முதல்வர் வேட்பாளர் விவகாரம், கட்சியில் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதென்றே சொல்ல வேண்டியுள்ளது. 

தேர்தல் வருவதற்குள், சிறை சென்றிருக்கும் சசிகலா வெளியே வந்துவிடுவார் என்பதால், அதிமுக மீதான சிக்கல் இன்னும்கூட அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சூழலை சமாளித்து, மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமருமா அதிமுக என்பதை, எடப்பாடியார் சொன்னது போல, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!