திரையுலகில் சின்ன கலைவாணராக திகழ்பவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவர் மரம் நடுவதை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். மரம் நடுங்கள், சுற்றுச் சூழலை காப்பாற்றுங்கள் என்று தான் அவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் மேடைகளில் தொடர்ந்து அவர் இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் விவேக் கடைசியாக தாராள பிரபு படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்த படம் பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். தான்யா ஹோப் நாயகியாக நடித்திருந்தார்.ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார். 

கொரோனா நேரத்தில் மக்கள் மாஸ்க் அணியும் விதம் குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் விவேக். உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் விவேக். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன், இந்த படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சில தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடிய மகேஷ் பாபு, தனது பிறந்தநாள் அன்று க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்று ஒன்றை நட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மகேஷ் பாபுவின் இந்த சவாலை ஏற்று மரக்கன்றுகளை நேற்று நட்டு வைத்தார் தளபதி விஜய். இதனை விமர்சித்து மீரா மிதுன் கமெண்ட் செய்துள்ளார். உங்கள் வில்லாவில் மரக்கன்றை நடுவது சமூக அக்கறை இல்லை. எங்கு மரக்கன்றுகளை நட வேண்டும் என்று விவேக்கிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் விஜய் என்று மீரா மிதுன் பதிவு செய்திருந்தார். 

இதுகுறித்து பதிவு செய்த நடிகர் விவேக், அனைத்து தளபதி ரசிகர்களின் உணர்வுகளை நீங்கள் காயப்படுத்திடீங்க... வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு, அவர்களது அன்பை பெற முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரபலங்கள் யாரையும் யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் விவேக்.