“நான் ரொம்ப கொடுத்து வைத்தவள்!”- நட்சத்திர நாயகர்களுக்கு அம்மாவாக நடிப்பது குறித்து மனம் திறந்த நடிகை சரண்யா பொன்வண்ணன்!

ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிப்பது பற்றி பேசிய சரண்யா பொன்வண்ணன்,saranya ponvannan about her mother role with star actors | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். குறிப்பாக தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகர்கள் பலருக்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா பொன்வண்ணன் மிகப் பொருத்தமாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். அந்த வகையில் நாளை டிசம்பர் 8ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கும் காஞ்சூரிங் கண்ணப்பன் திரைப்படத்திலும் நடிகர் சதீஷுக்கு, அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார். இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ் மற்றும் ரெஜினா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்தில் நாசர், ஆனந்த்ராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, பெனிஸ்டிக் கேரட், நமோ நாராயணா மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  

இந்த நிலையில், காஞ்சுரிங் கண்ணப்பன் படத்தின் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர், நடிகர் சதீஷ் ஆகியோருடன் நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் கலந்து கொண்ட சிறப்பு பேட்டி நமது கலாட்டா தமிழ் சேனலில் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த சிறப்பு பேட்டியில் நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் தனது முதல் படமான, இயக்குனர் மணிரத்னம் & உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியின் ஈடு இணையற்ற படைப்பான நாயகன் முதல் தொடங்கி தற்போது வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் 36 ஆண்டு திரைப்பயணம் குறித்து பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில், “ஒரு புகைப்படம் இருக்கிறது அதில் நீங்கள் நடுவில் அமர்ந்திருப்பீர்கள் உங்களுக்கு மகன்களாக நடித்த நட்சத்திரம் நடிகர்கள் எல்லோரும் சுற்றி அமர்ந்து இருப்பார்கள் அதை பார்க்கும்போது உங்களுக்கு இப்போது எப்படி இருக்கிறது? அந்த கூட்டம் இன்னும் கொஞ்சம் சேர்ந்து கொண்டே இருக்கிறது…” எனக் கேட்ட போது,

“ரொம்ப பெருமையாக இருக்கிறது ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கிறது எல்லோருக்கும் அப்படி என்னுடைய மகனாக நடிப்பதில் அவர்களும் சந்தோஷப்படுகிறார்கள் என்பது தான் எனக்கு கிடைத்த பெரிய பரிசு. கதாநாயகர்களாக எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு பெரிய மதிப்பு இருக்கிறது. அப்படி இருந்தும் நான் அம்மாவாக நடிப்பதை ஒரு மதிப்பாக எடுத்துக் கொண்டு அவர்கள் பேசுகிறார்கள் என்றால் அது எனக்கு கிடைத்த ஒரு பெரிய பரிசு தான்” என்றார். தொடர்ந்து அவரிடம், “ஷூட்டிங் சமயத்தில் பார்க்கும்போது அவர்களுக்குள் ஏதாவது சண்டை போட்டுக் கொள்வார்களா?” எனக் கேட்ட போது, “இல்லை இல்லை அப்படியெல்லாம் சண்டை எல்லாம் போடுவது கிடையாது எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். மேலும் அந்த பட்டியலில் நானும் இருக்கிறேன் என இப்போது சதீஷ் சொல்லும்போது எனக்கு எவ்வளவு பெருமை. இது எப்படி என்றால் எனக்கு மகனாக நடிப்பதில் அவர்களுக்கு ஒரு பெருமை அவர்களுக்கு ஒரு சந்தோஷம் என்பதை பார்க்கும்போது, நான் ரொம்ப கொடுத்து வைத்தவள் என நினைக்கிறேன்” என பதில் அளித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகை சரண்யா பொன்வண்ணன் மற்றும் நடிகர் சதீஷ் கலந்து கொண்ட காஞ்சூரிங் கண்ணப்பன் பட ஸ்பெஷல் பேட்டி இதோ…